×

5 மீனவ கிராமங்களில் காலியாக உள்ள பல்நோக்கு சேவை பணியாளர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

சென்னை: சென்னையில் 5 மீனவ கிராமங்களில் காலியாக உள்ள பல்நோக்கு சேவை பணியாளர்கள் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி வெளியிட்ட அறிவிப்பு: பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சென்னை மாவட்டத்தில் உள்ள கடலோர மீனவ கிராமங்களான பாலவாக்கம், சின்ன நீலாங்கரை, சின்னாண்டி குப்பம், ஈஞ்சம்பாக்கம், நைனார் குப்பம் ஆகிய 5 கிராமங்களில் காலியாக உள்ள 5 பல்நோக்கு சேவை பணியாளர்கள் பணியிடங்கள் ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்டத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

மீனவ கிராமங்கள் மற்றும் அதன் சுற்றுப்புற வருவாய் கிராமங்களில் வசிப்பவராக இருக்க வேண்டும். 1.7.2022 அன்றைய தேதியின்படி வயது 35க்குள் இருக்க வேண்டும். மாதாந்திர ஊக்க ஊதியம் ரூ.15,000 வழங்கப்படும். மீன்வள அறிவியல், கடல் உயிரியல் மற்றும் விலங்கியல் ஆகிய பிரிவுகளில் முதுகலை, இளங்கலை  பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் இல்லாத பட்சத்தில்  இயற்பியல், வேதியியல், நுண்ணுயிரியல், தாவரவியல் மற்றும் உயிர் வேதியியல் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலை, இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். இதில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், தகவல் தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கு  முன்னுரிமை அளிக்கப்படும்.

விருப்பமுள்ள நபர்கள் வருகிற 28ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உதவி இயக்குநர் அலுவலகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, எண்:2/601 கி, கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை, சென்னை-600 115 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-24492719, 9677047014 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : 5 Multi-Purpose Service Worker Vacancies in Fishing Villages can apply: Collector Information
× RELATED தந்தை இறந்த சோகத்திலும் 10ம் வகுப்பில் சாதித்த மாணவி: குவியும் பாராட்டுகள்